வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா வைகுண்டர்.

சாட்டு நீட்டோலை:
==================
காரணத்தி லேதிருப்பார் கடலிலே சொன்னதொரு
காரியமெங்கே விட்டாய் சிவனே அய்யா
விளக்கம்:
--------------
கலியனை அழிக்க வேண்டிய உன் விருப்பத்தைச் சொல்லும் பொழுது பால் கடலில் வைத்து நீ சொன்ன வாக்குறுதிகள் எங்கே? சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
வீதியிலும் பெரியசூரியன் கோட்டைக்குள் கண்ட
வெள்ளக் காகந்தா னெங்கே சிவனே அய்யா
விளக்கம்:
--------------
எந்த காலத்திலும் இல்லாத உனது பெரிய சூரியக் கோட்டைக்குள் (சங்கராரத்துக்குள்(தலைஉச்சி)) நான் கண்ட வெள்ளைக் காகம் ஆகிய பார்வதிதேவியை எங்கே விட்டாய் சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
அரகரா வென்றசொல்லை கரையேறா பாவிநீசன்
அறியவுமாட்டானைய்யா சிவனே அய்யா
விளக்கம்:
--------------
பிறவிக் கடலிலிருந்து வெளியேற முடியாத பாவியாகிய நீசன் அரகரா என்னும் மந்திரத்தின் பொருளை அறியவும் மாட்டானே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
சிவசிவா வென்றசொல் அவகட நீசருக்கு
தெரியவுமாட்டாதையா சிவனே அய்யா
விளக்கம்:
--------------
வஞ்சகத் தன்மையுள்ள அந்த நீசர்களுக்கு சிவசிவா என்னும் மந்திரச் சொல்லும் தெரியாதே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
சடைமுனி நானும் தவத்திலிருக்கிறதை
சண்டாளர் அறிவாரா சிவனே அய்யா
விளக்கம்:
--------------
அந்த சண்டாள நீசர்கள், சடைமுனியாகிய நான் தவத்தில் இருப்பதை அறிவாரோ சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
உமையும் சிவனும் திருச்சடையுந் தரத்தில
ஊமைபோல் இருப்பதேன் சிவனே அய்யா
விளக்கம்:
--------------
சிவனாகிய நீயும், உமாதேவியும், உமது தலையிலே காணப்படும் திருச்சடையும் அமைதியாக இருக்கின்ற காரணமேதோ? சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
தாடியை நான்வளர்த்து கோடிப்பே னையும்வைத்துச்
சடையுதே யெந்தன்மேனி சிவனே அய்யா
விளக்கம்:
--------------
என் முகத்தில் தாடியும் அதில் அதிகமான அளவு பேனையும் வளர்த்து என் உடம்பு எல்லாம் சோர்வு அடையுதே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
நற்பால் குடிக்கிறாரென றெல்லோரும் சொல்லுவார்
நான்கேட்ப தறிவாரா சிவனே அய்யா
விளக்கம்:
--------------
நான் நல்ல பாலமுது அருந்துகிறேன் என்று மக்கள் எல்லாரும் சொல்லுவார்கள், ஆனால் நான் நீசர்களிடமிருந்து கேட்கும் வசை மொழிகளை அவர்கள் அறிய மாட்டார்கள் சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
எந்தெந்த நேரமும் இருந்திருந்த மாமுனிக்கு
இடுப்பும் கடுக்குதையா சிவனே அய்யா
விளக்கம்:
--------------
முழு நேரமும் ஒரே இடத்தில் இருக்கின்ற மாமுனியாகிய எனக்கு இடும்பும் வலிக்குதே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
அக்கினியால் நீயச்சொன்ன சக்கிலியான் தலையின்னும்
அற்றுவிழவில்லையே சிவனே அய்யா
விளக்கம்:
--------------
தீப்பிழம்பை உருவாக்கி அந்த அக்கினியிலே என்ன நீந்தச் சொன்ன நீச கலியனுடைய தலை இன்னும் துண்டாக அற்று விழவில்லையே சிவனே அய்யா.
சாட்டு நீட்டோலை:
==================
என்னைப்பழித்தவன் தன்னடைய கூரையிலே
இன்னும் இருப்பானோ சிவனே அய்யா
விளக்கம்:
--------------
என்னைப் பழித்துப் பேசிய நீசன் தன்னுடைய வீட்டினில் செத்து அழியாமல் இன்னும் இருப்பானோ சிவனே அய்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக