வியாழன், 16 ஏப்ரல், 2015

அகிலம்:

வைகுண்டரும் கன்னிகளும் விவாதித்தல்:
=======================================
கன்னியர்:
--------------
மதலையுந் தந்து எங்கள் மனச்சட வெல்லா மாற்றிக்
குதலைகள் தமக்கு இந்தக் குருமுடி சூட்டித் தர்மப்
பதியுக மதிலே யெங்கள் பார்முடி மன்ன ராக
நிதமிருந் தரசே யாள நின்மக்கள் தருவீ ரென்றார்
விளக்கம்:
--------------
அய்யா, எங்கள் குழந்தைகளைத் தந்து மனச் சடைவு எல்லாம் மாற்றுவீராக. எங்கள் குழந்தைகளுக்குக் குருவாகிய உம்முடைய திருமுடியைச் சூட்டி, தருமபதியை ஆளுகின்ற முடி சூடிய மன்னராக்கி, அழியாதவாறு அவர்களை அரசாள வைக்க எமது குழந்தைகளைத் தருவீராக.
அகிலம்:
=======
வைகுண்டர்:
------------------
தருவீ ரெனவுரைக்கு மடமாதே நீங்கள்
சந்ததியைப் பெற்றிடத்தில் தயவாய்ப் பாரும்
பெருகியே வாழ்ந்திருப்பா ரங்கே சென்று
பெற்றிடத்தைப் பார்க்குகையி லுண்டு மங்கே
மருவி யென்னைக் கேளாதே காட்டினூடே
வாழ்ந்திருப்பார் கண்டுகொள்வீர் திட்டஞ் சொன்னோம்
சருவியென்னை நெருங்காதே மடவீ ரெல்லாம்
சந்ததியைத் தேடிவனஞ் செல்லு வீரே
விளக்கம்:
---------------
”குழந்தைகளைத் தருவீராக” எனச் சொன்ன கன்னிகளே, நீங்கள் உங்கள் குழந்தைகளைப் பெற்ற இடத்தில் சென்று தயவு செய்து பார்ப்பீராக. உங்கள் குழந்தைகள் ஒரு இடமும் போயிருக்க மாட்டார்கள். காட்டினூடேதான் இருப்பார்கள். அங்கு சென்று பார்த்தால் அவர்கள் அதிக கூட்டமாகப் பெருகி வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நிச்சயமாக அவர்கள் காட்டின் உள்ளே வளர்ந்து கொண்டிருப்பார்கள். போய் பார்த்துக் கண்டு கொள்வீராக. உடனே கன்னியர்கள் அய்யாவை நெருங்கி வரும் பொழுது, அய்யா, சற்று நில்லுங்கள், நீங்கள் தந்திரமாக நழுவி வந்து என்னை நெருங்காதீர்கள். உங்கள் குழந்தைகளைத் தேடி அந்தக் காட்டிற்கே செல்லுங்கள்.
அகிலம்:
========
கன்னியர்:
--------------
செல்லுவீ ரெனமொழிந்த தேனே கண்ணே
சீமானே நாமாது புரக்கு மாலே
பல்லுயிரு மிகப்படைத்தப் பாக்கிய வானே
பருவனத்தி லெங்களைநீர் பற்றி வந்து
தொல்லைவினை செய்துநாம் சுமந்து பெற்ற
சுத்தகுல மானதெய்வச் சான்றோர் தம்மை
இல்லிடத்தி லிப்போது தருகி லானால்
இழுத்து வும்மைச் சந்தியிலே ஏற்றுவோமே
விளக்கம்:
--------------
“காட்டுக்குச்செல்லுங்கள்” என்று சொன்ன தேன் போன்றவரே, கண் போன்றவரே, சீமானே, சரசுவதிதேவியைக் காக்கும் திருமாலே, எல்லா உயிர்களையும் விரைவாகப் படைத்த பாக்கியவானே, கடுமையான வனத்தில் நீர் வந்து எங்களைக் கைப்பற்றித் தொல்லை தரும் பல செயல்களைச் செய்து அதன் விளைவால் நாங்கள் சுமந்து பெற்ற சுத்தமான தெய்வக் குலச் சான்றோராகிய குழந்தைகளை இப்பொழுது நாங்கள் இருக்கின்ற இந்த இடத்தில் தராவிட்டால் உம்மை இழுத்து முச்சந்தியிலே ஏற்றிடுவோம்.
அகிலம்:
========
வைகுண்டர்:
------------------
சந்தியி லேற்றுவோ மென்ற மாதேகேளு
தருவதுண்டோ முன்கடன்கள் தந்த துண்டோ
பந்தியழித் துங்களுடப் பேச்சை நானும்
பகருவே னுங்களைப் பார்பழித்துப் பேச
முந்தியிதை யுரைத்திட்டே னோடிப் போங்கோ
உலகநருள் அறிந்தாக்கால் சிரிக்க லாகும்
சிந்தனைக்கே டாகும்வரை நிற்க வேண்டாம்
தேன்மொழியே மறுவிடம்போய்த் தேடு வீரே
விளக்கம்:
=========
”என்னை முச்சந்தியில் ஏற்றிடுவோம்”, என்று கூறிய கன்னியரே, நான் சொல்லுவதைக் கேளுங்கள். நான் உங்களுக்குத் தரவேண்டிய முன் கடன்கள் உள்ளனவா? நீங்கள் ஏதாவது தந்தது உண்டா? உங்களைப் பற்றிய இழிவான பேச்சைப் பற்றி நானும் இவ்வுலக மக்களும் பழித்துப் பேசும்படியாகவும், உங்கள் கூட்டம் இங்கிருந்து ஒழிந்திடவும், உண்மையைக் கூறப் போகிறேன். உங்களை எச்சரிப்பதற்காக முதலில் இதை மறைத்துக் கூறுகிறேன். ஒளிந்து ஓடி விடுங்கள். உங்கள் உண்மையை உலக மக்கள் அறிவார்களேயானால் அவர்கள் சிரிப்பதற்குக் காரணமாகி விடும். உங்கள் எண்ணங்கள் அழிவதற்கு முன்னால் தேன் மொழியையுடைய பெண்களே, நீங்கள் இங்கே நிற்காமல் வேறிடம் சென்று உங்கள் குழந்தைகளைத் தேடுங்கள்.
அகிலம்:
========
கன்னியர்:
--------------
தேடுவீ ரெனமொழிந்த இந்திர ஜாலம்
தெய்வமட மாதரொடு செலுத்த வேண்டாம்
நாடுபதி னாலறியு முமது கள்ள
ஞாயமது எங்களொடு நவில வேண்டாம்
வீடுவழி தோறும்விருந் துண்டு முன்னே
மெல்லிமட வார்சிலரைக் கொள்ளை கொண்டு
பாடுபட்ட பாட்டையினி நாங்கள் சொன்னால்
பாரிலுள்ளோ ருமைப்பேசிப் பழிப்பர் காணும்
விளக்கம்:
--------------
குழந்தைகளை வேறிடத்தில் தேடுங்கள் என்றவரே, உமது இந்திர சாலங்களை இந்தத் தெய்வக்கன்னியரிடம் காட்ட வேண்டாம். பதினான்கு உலகங்களும் உம் கள்ளத்தனத்தை அறியும். உம் நியாயத்தை எங்களிடம் சொல்ல வேண்டாம். வழியில் கண்ட வீடுதோறும் சென்று முதலில் விருந்து உண்டு, பிறகு மென்மை பொருந்திய பெண்கள் சிலரை உம்மை விரும்பச் செய்து, அவர்கள் பட்ட பாட்டினை இனி நாங்கள் சொன்னால் இந்த உலக மக்கள் உம்மைப் பற்றி அவதூறாகப் பேசிப் பழிப்பார்கள். அறிந்து கொள்வீராக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக