வியாழன், 16 ஏப்ரல், 2015

அகிலம்:

வைகுண்டர்:
==========
பழிப்ப ரெனச்சொன்ன இளம்பாவை மாரே
பாரிலுள்ளோ ரறிவார்கள் பச்சை மாலின்
களிப்பதுவுங் காண்டமுறை நூல்கள் தோறும்
காரணத்தைச் சொல்வார்கள் கருதிக் கேளு
சுழிப்பதுவு மமைப்பதுவும் நமக்குள் ளாகும்
தோகையரே யிதுஎனக்குச் சொந்த வித்தை
குளிப்பதுவில் சுனையாடி மதலை யீன்றக்
கோலமதைச் சொன்னாக்கால் குறைவ தாமே
விளக்கம்:
========
என்னை மக்கள் பழித்துப் பேசுவார்கள் என்று சென்ன இளமை பொருந்திய பெண்களே, இந்த உலக மக்கள் இந்தப் பச்சைமாலின் உல்லாச விளையாட்டைப் பற்றி நூல்தோறும் படித்து, அதன் தத்துவக் காரணங்களைத் தெளிவாக அறிந்து சொல்லுவார்கள். நீங்கள் கருத்தோடு கேட்பீராக. நான் வினைகளைச் செய்து கழிப்பதும், அதை உருவாக்குவதும் எனக்குள்ளே இருக்கும் விளையாட்டாகும். கன்னியரே, இவை என்னுடைய சொந்த வித்தைகள். சுனையில் நீராடிக் குளிக்கின்ற சமயத்தில் குழந்தை ஈன்ற உங்கள் கதையினை வெளியே சொன்னால் அவமானம் ஆகுமே.
அகிலம்:
=======
கன்னியர்:
---------------
குறைவதா மெனச்சொன்னக் குறவா கேளும்
கோவேங் கிரிவாழுங் குலமா மாதர்
மறைமுதல்வ னானசிவ னார்க்கு நாங்கள்
வந்துசுனை யாடிகெங்கைத் திரட்டி யேகத்
துறையறியாக் களவாண்டுத் தேய்ந்த கள்வா
தொல்புவிக ளறியாதோவுன் சுத்தக் கள்ளம்
இறையளவு மெய்யில்லாப் பொய்யே சொல்லும்
ஏமாளிக் கள்ளரென எவருஞ் சொல்வார்
விளக்கம்:
========
எங்களுக்கு அவமானம் ஆகும் என்ற குறவரே, கேட்பீராக. நாங்கள் சுனைக்கு வந்து நீராடிக் குளித்துவிட்டு நீரைத் திரட்டிக் கயிலை மலையில் வாழுகின்ற உயர்ந்த குலப் பெண்கள் ஆவோம். வேதங்களுக்கு முதலோனான சிவனுக்கு நீரைத் திரட்டிக் கொண்டு செல்லும் பொழுது, எங்களைக் கண்டு கற்பினைக் களவு செய்து விட்டு இருக்குமிடம் அறிய முடியாவண்ணம் சென்று விட்ட கள்வரே, இந்தப் பழமை வாய்ந்த பூமியில் வாழும் மக்கள் உம்முடைய முழுக்கள்ளத்தையும் அறியாரோ? அணுவளவுகூட உண்மை இல்லாது பொய்யே சொல்லிப் பிறரை ஏமாளியாக்கும் உம்மை கள்ளா என்று உலகம் சொல்லும்.
அகிலம்:
=======
வைகுண்டர்:
==========
கள்ளரெனச் சொல்லிவந்த மாதே நீங்கள்
களவாண்டீர் கயிலையதி லீசர் முன்பில்
வெள்ளமது திரளாமல் கள்ளத் தாலே
வெம்மருண்டு நின்றவித வெட்கங் கண்டு
வள்ளல்சிவ னாரறிந்துக் கலியில் சான்றோர்
மேல்வழியில் பிறக்கவென்று சபித்தார் முன்னே
உள்ளதெல்லாஞ் சொல்லிடுவே னோடிப் போங்கோ
ஓகோகோ வெனச்சொல்லி யுறுக்கி னாரே
விளக்கம்:
========
கள்ளர் என்று சொல்லிக் கொண்டு வந்த கன்னியரே, நீங்கள்தாம் கயிலையில் ஈசர் முன்பு பொய் சொன்னீர். சுனையில் நீர் திரட்டும்போது உங்கள் கள்ளக் காதலினாலே தண்ணீர் திரளாமல் உள்ளம் கலங்கி நின்ற விதத்தையும், உங்களுடைய வெட்கத்தையும் வரம் கொடுக்கும் வள்ளலான சிவன் அறிந்து உங்களை கலியுலகில் சான்றோராகிய உயர்ந்த குல வழியில் பிறக்கச் செல்லுங்கள் என்று சபித்தாரே, நினைவு இருக்கிறதா? இன்னும் உங்களைப் பற்றிய உண்மைகளை எல்லாம் சொல்லி விடுவேன். அய்யோ, என்று கூறி ஓடி விடுங்கள் என்று சொல்லி பயமுறுத்தினார்.
அகிலம்:
=======
கன்னியர்:
========
உறுக்கிநீ ருரைத்தசுணை யுமக்கே யல்லால்
ஓவியங்க ளேழ்பேர்க்கு முண்டோ சொல்லும்
இறுக்கிவைத்த நீரிளகச் சேய்த கள்ளம்
ஈசர்முத லெல்லோருஞ் சொல்லு வார்கள்
சிறுக்குமிடை மாதருட வீட்டில் வெண்ணெய்த்
திருடியுண்டக் கள்வரெனச் சொல்வா ரும்மை
பொறுக்கஇனி மாட்டோங்கா ணுமது ஞாயம்
புகன்றிடுவோ மினியண்டம் பொடியத் தானே
விளக்கம்:
========
எங்களைப் பயமுறுத்தி நீர் கூறிய சுணையான வார்த்தைகள் எல்லாம் உமக்குத்தான் பொருந்துமே அல்லாமல் ஓவியம் போன்ற எங்கள் ஏழுபேரையும் அச்சுணை வார்த்தைகள் பாதிக்குமா? சொல்லுவீராக. நாங்கள் எங்கள் கற்பினால் திரள வைத்த நீரை உமது கள்ளத்தனமான செயலால் திரளாது இளகச் செய்த உம்மைப் பற்றி வானோர்கள் முதல் ஈசர்வரை எல்லாரும் சொல்லுவார்கள். கேட்டுப் பாரும். இடையர் குலப் பெண்களுடைய வீட்டில் வெண்ணைய் திருடி உண்ட உம்மைத்தாம் மக்கள் கள்வர் என்று கூறுவார்கள். இனி, நாங்கள் பொறுக்க மாட்டுடோம். உம்முடைய கள்ள நியாயங்களை இந்த உலகம் அறிந்து ஆச்சரியப்படும்படியாக வெளியே சொல்லி விடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக