வியாழன், 16 ஏப்ரல், 2015

அகிலம்

முட்டப்பதியிலிருந்து அய்யா தோப்புப்பதி திரும்புதல்:
-------------------------------------------------------------------------------------------
அன்றுதிரு மாலும் அன்பாய் விடைவேண்டி
அலைவாய்க் கரையில் ஆதி வருகுமுன்னே
நிலையான சான்றோர் நிரம்பவந்து கூடினரே
பண்டிருந்த நல்லப் பதியில்வந்து சேர்ந்தனரே
விளக்கம்:
வைகுண்டர் நாராயணரிடம் தாமரைப்பதிக்கு திரும்புவதற்கு அன்புடன் அனுமதி பெற்று, அலைகள் வீசும் கடற்கரைக்கு வரும் முன்னதாகவே அங்கு அவர் வருகையை அறிந்து, அவரிடம் நிலையாக அன்பு கொண்டிருந்த சான்றோர்கள் நிறையபேர் வந்து கூடி இருந்தனர்.
அகிலம்:
கண்டந்தச் சான்றோரைக் கரியமா லுமகிழ்ந்து
நன்றென்று சொல்லி நாராயணர் கூட்டிப்
கண்டெந்தப் பேரும் கனபிரிய மாய்மகிழ்ந்து
தாமோ தரனார் தலத்தில் மிகச்சேர்ந்து
நாமோ முனிகூட நாடி மிகஇருந்தார்
விளக்கம்:
கருமை நிறமான வைகுணடர், அவர்களைப் பார்த்து மகிழ்ந்து, நன்று என்று கூறி அவர்களை அழைத்துக் கொண்டு, முன்பு தாம் இருந்த தாமரைப்பதிக்கு வந்து சேர்ந்தார். இவர்களைக் கண்ட தாமரைப்பதியில் வாழும் மக்கள் எல்லாரும் மிகுந்த அன்புடன் வரவேற்றனர். வைகுண்டரின் தலத்தில் எல்லாரும் சேர்ந்து நாமம் அணிந்த ஓங்காரநாதனாகிய வைகுண்டருடன் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர்.
அகிலம்:
இருந்து மிகப்பாலும் ஏற்றநல்ல பச்சரிசி
திருந்து சிறுமணியும் தேங்காய்ப்பூ தன்னுடனே
கொல்ல மிளகு கூண்டப் பொடியுடனே
நல்லாக இவ்வகைகள் நாடியொரு நேரமதாய்
காவி மிகப்புரிந்து கனத்திருத்தி ராட்சமிட்டுத்
தாவமுடன் மாத்திரைக்கோல் தானிதுவோ டேயிருந்தார்
விளக்கம்:
அவர்கள் அதிக பாலும், அதற்கு ஏற்ற நல்ல பச்சரிசியும், சுத்தமான சிறு மணியும், தேங்காய்த் துருவலும் சேர்த்து, கொல்ல மிளகு கலந்த பொடியுடன் விரும்பி ஒரு நேரம் உண்டு, காவி உடை அணிந்து, உத்திராட்ச மாலை இட்டு, மாத்திரைக் கோலைத் தாங்கி வாழ்ந்தனர்.
அகிலம்:
வைகுண்டர் உபதேசம்
---------------------------------------
கொஞ்சநாள் கழித்துக் கூண்டதிவ சம்பார்த்துப்
பஞ்சகரு ணாதிகளைப் பண்பாகத் தானிறுத்திக்
கந்தை மிகச்சூடிக் காவித்தொட்டில் மீதிருந்து
விந்தை யுடனுகத்து விவரிப்பெல் லாமெடுத்துக்
விளக்கம்:
சிறிது நாள்கள் கழித்து, வைகுண்டர் நல்ல நேரம் கூடிய நாள் பார்த்துப் பஞ்சகரணம் முதலியவற்றைத் தமக்குச் சாதகமாக நிலை நிறுத்தி, கந்தலான ஆடையை உடுத்திக் கொண்டு, காவித் தொட்டிலின் மீது அமர்ந்து, எல்லாரும் ஆச்சரியப்படும்படி மிகவும் முக்கியமாக அந்த யுகத்தில் நடக்கப்போகும் எல்லா நிகழ்ச்சிகளையும் பற்றி அங்கு நின்ற மக்களிடம் உபதேசிக்கலானார்.
அகிலம்:
கூறினா ரந்தக் கூண்டரியக் காரணத்தை
பேறிருக்கும் நல்லோர் பெரிய பெருமானும்
நாடழியப் போறதுவும் நன்னாடு தோன்றுவதும்
பாடழிய நீசன் படப்போற செய்தியதும்
நல்ல மனுவோர் நாடி முழிப்பதுவும்
வல்லபுவி தர்மம் வாழ்வதுவுஞ் சிறப்பும்
சொல்லி விரித்தார் சிறந்ததொட்டில் மீதிருந்து
விளக்கம்:
கலியுகம் அழியப் போவதையும், தருமயுகம் தோன்றப் போவதையும், கலிநீசன் துன்புற்று அழியப் போகின்ற செய்தியையும், நல்ல மனிதர்கள் தருமபதி நாடி ஆத்மீக விழிப்புறுவதையும், மிகவும் வலிமையான தருமபூமியில் சென்று சான்றோர்கள் வாழுகின்ற சிறப்பினையும் விரிவாக உபதேசித்தார்.
அகிலம்:
எல்லோருங் கேட்டு இப்போதோர் காரணந்தான்
நடத்துகிறா ரென்று நல்லோர்கள் சொல்லிடுவார்
விளக்கம்:
இதைக் கேட்டு நல்லவர்கள் எல்லாரும் இப்போது வைகுண்டர் இந்நிகழ்ச்சிகளை எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடத்திக் கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக