வியாழன், 16 ஏப்ரல், 2015

அகிலம்:

அனைவோ ரும்புகழும் அரன்கயிலை வாழ்ந்ததுவும்
சுனையாடப் போனதுவும் தூயோ னடத்தினதும்
பிள்ளைதனைப் பெற்றதுவும் பெருவனத்தில் சென்றதுவும்
வள்ளல் சிவனை வருந்தித் தவம்புரிந்து
உலகில்மிகத் தோன்றும் உள்ளவர்த்த மானமெல்லாம்
சிலைநுதலிக் கன்னி சொல்லி மிகப்படிப்பார்
அப்போ திருமால் அடக்கி மிகமனதில்
செப்புவ தெல்லாம் சிந்தைதனில் கொண்டிருந்தார்
விளக்கம்:
வில் போன்று வளைந்த புருவத்தையுடைய அக்கன்னியர், தாங்கள் சிவன் வாழும் கயிலை உலகில் வாழ்ந்ததுவும், அருவியில் நீராடப் போனதுவும், தூயோனாகிய திருமால் நாடகம் நடத்தியதுவும், பிள்ளைகளைப் பெற்றதுவும், பெரிய வனத்தில் தவம் செய்யச் சென்றதுவும், கொடை வள்ளல் ஆகிய சிவனை நினைத்துத் தவம் புரிந்ததுவும், அவரை வருத்தி வரம் பெற்று உலகில் விரைவாகத் தோன்றியதுவும் ஆகிய நிகழ்ச்சிகளை எல்லாம் சொல்லிக் காண்டம் படித்தனர். இவற்றை எல்லாம் வைகுண்டர் மனதில் அடக்கி அவர்கள் கூறிய எல்லாவற்றையும் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
அகிலம்:
உமைமண்டைக் காட்டாள் உற்ற பகவதியாள்
இமையோர் புகழும் ஏற்றகுல பார்பதியாள்
சீதை மடந்தை சேயிழைமா ரெல்லோரும்
மாதவனை நோக்கி வளங்கூறி யேபடிப்பார்
விளக்கம்:
இவ்வாறே உமையவள், மண்டைக்காட்டம்மை, பகவதியாள், வானோர் புகழுகின்ற உயர் குலப் பார்வதியாள், சீதை, ஆகிய பெணகள் எல்லாரும் மாதவனாக அமர்ந்து கொண்டிருக்கின்ற வைகுண்டரை நோக்கி தங்கள் முந்தைய நிலைகள் பற்றிச் சொல்லி காண்டம் படித்தனர்.
அகிலம்:
பாவிக் கலியன் பழிநீசன் தோன்றினதால்
மேவிக் கலியில் மிகமூழ்கி மாயமதால்
மாயக் கலியை வதைக்குமந்த நாளையிலே
தேசமதி லெங்களையும் திருக்கல்யாண முகித்து
எங்களுட நாயகனார் இங்குவரு வோமெனவும்
விளக்கம்:
அப்பெண்கள் எல்லாரும் வைகுண்டரை நோக்கி, சுவாமி பாவியாகிய கலி நீசன் தோன்றிய காரணத்தால் தாங்கள் இக்கலியுகத்தில் தோன்றி கலியில் மூழ்கி ஆச்சரியப்படும்படி உபாயக் கலியைக் கவனமாக அறுத்து அழிக்கும் அச்சமயத்தில் மாயக் கலியை வதைத்து அழிக்கின்ற அச்சமயத்தில் அவனது தீய சக்தி முறைகளை அழித்து, சுவாமி, இவ்வுலகில் தாங்கள் எங்களைத் திருமணம் முடிக்க எங்கள் கணவராக இங்கு வருவதாகச் சொன்னீரே.
அகிலம்:
எங்களையு மிங்கே இக்கோல மாய்வரவே
சொல்லி யயைச்ச சுவாமிநீர் வந்தீரோ
பல்லுயிரும் பணியும் பரமனேநீர் வந்தீரோ
என்று மடவார் இப்படி யேயிசையப்
விளக்கம்:
எங்களை இங்கே ஆராதனைக் கோலமாக வர சொல்லி ஆள் அனுப்பிய சுவாமி, நீர் உண்மையில் வந்துவிட்டீரா? எல்லா உயிர்களும் பணிந்து போற்றுகின்ற சிவனே, நீர் வந்துவிட்டீரா? என்று அங்கு வந்த ஆராதனையுள்ள பெண்கள் எல்லாரும் அவரவர்க்குரிய வகையில் சொல்லி அழைத்தனர்.
அகிலம்:
பண்டு முறைபோல் பிரப்பிரம மாயிருக்கும்
எண்ணித் திருமால் இருதயத்தி லேயடக்கி
மண்ணி லுள்ளோர்கள் வந்துமிகக் கூடிநிற்க
மேலோகத் தார்கள் இறைஞ்சிமிகப் பார்த்துநிற்கப்
பூலோக மெல்லாம் புதுமையெனப் பார்த்துநிற்க
விளக்கம்:
முந்தைய விதிமுறை போன்று பரம்பிரம்மமாய் அமர்ந்திருந்த வைகுண்டர் இவற்றை எல்லாம் கேட்டு, மனதில் அடக்கித் தெளிவாகச் சிந்தித்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சிகளை எல்லாம் காண அங்கே எல்லாரும் கூடி நின்றார்கள். வான லோகத்தார்கள் பணிவுடன் பார்த்து நின்றார்கள். இப்பூலோக மக்கள் எல்லாரும் இதை புதுமை என்று சொல்லி வந்து பார்த்தனர்.
அகிலம்:
தேவர்களுக்குச் சிறை:
====================
அப்போது மாயாதி ஆகமத் தின்படியே
செப்போடு வொத்த தேசத் திருப்பதியில்
வாழுகின்ற தேவரையும் வாகாய் வரவழைத்து
நாளுக்கு நான்சொன்ன ஞாய முறைப்படியே
நடத்தாம லிப்போ ஞாயமீறி நீங்கள்
அடத்தமாய்ச் செய்வதென்ன எல்லோருஞ் சொல்லுமென்றார்
விளக்கம்:
அப்பொழுது வைகுண்டர் முந்தைய ஆகமத்தின்படி செப்புச் சிலையைப் போன்று அழகு பொருந்திய அத்தேசத்தின் கோவில்களில் வாழ்ந்து வரும் தேவர்கள் எல்லாரையும் தந்திரமாக வரவழைத்து அவர்களை நோக்கி, தேவர்களே, நான் கடைப்பிடிக்கச் சொன்ன சட்ட நீதி முறைப்படி நடத்தி வராமல் அந்த சட்ட முறைகளை மீறி நீங்கள், முறை கேடாக நடக்கின்ற காரணம் என்ன? இதற்கு நீங்கள் எல்லாரும் பதில் சொல்லுங்கள் என்று கேட்டார்.
அகிலம்:
உடனே யெல்லோரும் உள்ள மிகத்தளர்ந்து
திடமே குளறிச் சொல்லவா யில்லாமல்
புத்தி மயங்கிப் பொறியழிந்து தேவரெல்லாம்
சத்திகெட்டார் போலே தானே விறுவிறுத்து
நின்ற நிலையை நெடியதிரு மாலறிந்து
குன்றுதனில் கொண்டு கொழுவிலங்கில் தான்சேர்த்து
மன்று ஒருகுடைக்குள் வைகுண்டம் ஆளவரும்
இன்றுமுதல் லக்குவரை இருங்கோ பாராவதிலே
வைத்தாரே நல்ல வடவா முகமதிலே
செய்த்தான் விதியெனவே தேவரெல்லா மிருந்தார்
விளக்கம்:
உடனே, தேவர்கள் உள்ளம் கலங்கி, தங்களது திடத்தன்மை குலைந்து சொல்ல வார்த்தைகள் இல்லாமல் திணறி, அறிவு மயங்கி, ஐம்பொறிகளும் கலங்கி, எல்லாச் சக்திகளையும் இழந்தவரைப் போன்று, கலக்கமுற்று நின்று கொண்டிருக்கின்ற நிலையினைப் வைகுண்டர் பார்த்து, இத்தேவர்களை மலையில் கொண்டு சென்று விலங்கில் கட்டிச் சிறையில் வையுங்கள். இவர்கள் இந்த நாளிலிருந்து, வைகுண்டராகிய நான் ஒரு குடைக்குள் தருமயுகத்தை ஆளும்வரை அங்கே சிறையிலேயே இருக்கட்டும் என்று கூறி அவர்களை நல்ல வடவா முகத்தில் சிறையில் அடைத்தார். இதை பேய்களுக்கு கிடைத்த விதியை போன்று எண்ணி, அத்தேவர்கள் எல்லாரும் சிறையில் அமர்ந்து இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக