வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா வைகுண்டர்.

அகிலம்:
-----------
இப்படியே பெண்கள் இன்னுஞ்சில பேர்களுண்டு
அப்படியே அவரவர்க்கு அந்தந்த வேடமிட்டு
வகைவகையாய் வேசம் மாறி யுருவெடுத்துத்
திகையாம லவர்க்குச் சொல்லு முறைபோலே
கலியாணக் காட்சி கணக்குத்தீர் வைமுறையும்
வலியானக் கலியில் வாழ்வைமிகக் கொண்டாடிச்
விளக்கம்:
--------------
இப்படி நீ திருமணம் செய்து கொள்ள வேண்டிய பெண்கள் இன்னும் சிலபேர் உள்ளனர். அப்படி அப்படியே அவரவர்களுக்கு ஏற்ற வகையில் அந்தந்த வேடத்தை நீ புனைந்து அவர்கள் மனம் கலங்காதபடிக்கு, அவர்களுக்கு வேண்டிய வழிமுறைகளையும் சொல்லி, அதுபோல் கல்யாணக்காட்சி, வரதட்சணை, கணக்குத் தீர்வை இவற்றை முறையாக பேசி வலிமையான இக்கலியுகத்தில் உன் வாழ்வை நல்ல முறையில் கொண்டாடி வாழந்து வா.
அகிலம்:
-----------
சாம்பசிவக் கோலம் சாருமஞ்ச ணைக்கோலம்
ஆம்பக் குறக்கோலம் ஆடிமிகக் கழித்து
முற்றுந் திருநாள் முழுது மிகநடத்திப்
விளக்கம்:
--------------
சாம்பசிவக் கோலம், சாரும் மஞ்சணைக் கோலம், ஆம்பக் குறக்கோலம் போன்றவற்றை எடுத்து நன்றாக ஆடி மகிழ்ந்து முழுவதுமுள்ள திருநாள்களை நல்ல முறையில் நடத்தி வா.
அகிலம்:
-----------
பத்தும் பெரிய பாலர்தங்கள் வீடேகி
விருந்து மிகவும் விரைவாகத் தானருந்தி
திருந்து புகழ்கிளைபோல் சிலவீட் டமுதருந்தி
பிச்சைபோ லுமருந்தி பெண்வழிச்சோ றுமருந்தி
மிச்சமாய்ப் புவியில் வேண்டும் பவிசுடனே
விளக்கம்:
--------------
முப்பூ நிலை அடையத் தகுதி பெற்ற சான்றோர்கள் வீட்டிற்கு சென்று அவர்கள் தருகின்ற விருந்தினை மகிழ்ச்சியுடன் ஏற்று உயர்வான புகழ் பெற்ற உறவினர் போன்றவர்கள் தரும் விருந்தையும் ஏற்றுக் கொள்.
அகிலம்:
------------
பிச்சைபோ லுமருந்தி பெண்வழிச்சோ றுமருந்தி
மிச்சமாய்ப் புவியில் வேண்டும் பவிசுடனே
வெற்றியி டம்மானம் விருதுக் கொடிகள்கட்டிப்
புத்திர ரானோர்க்குப் பிழைக்கும்வலு புத்திசொல்லிப்
பாடித்தீர் வைதீர்த்துப் பரசோ தனைபார்த்து
விளக்கம்:
--------------
பிச்சை ஏற்று உண்பதைப் போன்று மிகவும் தாழ்மையுடன், அவர்கள் தரும் உணவை ஏற்று உன் பெண் வழி உறவினர் வீட்டிலும் அன்னம் உண்டு, இவ்வுலகில் உனக்குப் பிடித்த இன்பங்களை அனுபவித்து இடம்மான மேளமிட்டு விருதுக் கொடிகள் கட்டி, உன் குழந்தைகளாகப் பிறந்தவர்களுக்கு அவர்கள் பிழைக்கின்ற உயர்வான புத்திகளைச் சொல்லி உபதேசித்து நன்மை தீமைகளை எடுத்து கூறி அவர்கள் குறை நிறைகளைப் பரிசோதித்து வாழ்ந்து வா.
அகிலம்:
------------
ஆடித்தீர் வைதீர்த்து ஆண்பெண் மிகவேகண்டு
நல்லாண்டு கண்டு நாடும் மங்கையரைச்
செல்லக் கலியாணம் செய்து சிறப்புடனே
செந்தா மரையா ளுடனே சிறப்பிருந்து
ஆனை கன்றீணி அதினா லுலகமெல்லாம்
தானாக நீயும் தலைவ னெனச்சமைந்து
முரணிக் கலியழிய முச்சுடரு மொன்றாவாய்த்
விளக்கம்:
--------------
உன்னைப் பரம்பொருளாகப் பாவித்து ஆடி ஆண், பெண்களுக்கு நடுத்தீர்ப்பு செய்து நல்ல ஆண்டு ஒன்றில், உன்னை நாடும் பூவைப் போன்ற மங்கையர்களை அன்புடன் திருமணம் செய்து சிறப்புடன் செந்தாமரைப் பூவில் இருக்கும் இலட்சுமியுடனும் (பரதேவதை) இருந்து, கொத்துக் கொத்தான கூந்தலையுடைய கன்னியரோடும் மகிழ்ச்சியோடு கூடி, இல்லற வாழ்க்கையில் ஆனையைப் போன்ற பலமுள்ள குழந்தைகளைப் பெற்றெடுத்து, அதனால் இவ்வுலகம் எல்லாம் நீயேயாக்க் காட்சி அளித்து எல்லாருக்கும் தலைவனாக அமர்ந்து அரக்கத்தனமான கலி அழிய முப்பொருளும் ஒரு பொருள் ஆவாய்.
அகிலம்:
-----------
தரணி யீரேழும் தடதடெனத் தானசைத்து
நீயதின்மே லாளும் நிண்ணயத்தைக் கேள்மகனே
விளக்கம்:
-------------
பதினேழு உலகங்களும் மிகவும் விரைவாக உன்னைப் பற்றி உணரச் செய்து, அதன் பிறகு, நீ ஆட்சி புரிவது பற்றி இனி நான் கூறுவதைக் கேள்.
அகிலம்:
-----------
தங்க முடிசூடிச் சான்றோர்க்கு நால்வரமும்
அங்கவர்க்குத் தானருளி அழகு மிகக்கொடுத்து
நல்லதர்ம மாக நாடும் புவியதிலே
அல்லல்வினை யற்று அவனியதை நீயாள்வாய்
விளக்கம்:
-------------
நீ தங்கமுடி சூடிச் சான்றோர்களுக்குப் பல வரங்கள் கொடுத்து, அழகு நிலையும் கொடுத்து, நல்ல தரும்மாக உன்னை நாடும் மக்களுக்குத் துன்ப வினைகள் முதலியவற்றை நீக்கி, இந்த உலகத்தை நீ ஆண்டு வருவாய்.
அகிலம்:
-----------
அப்போ நீயரசு ஆளுகின்ற நாளையிலே
செப்பொண்ணாச் செல்வம் சிறப்புமிக வுண்டாகும்
பூமடந்தை வீட்டில் புகுந்து கொலுவிருந்து
தாமுனிந்து நீயும் தரணிதனில் வந்தவுடன்
நான்வந்து உன்னை நாடி மிகஎடுத்துத்
தான்மகிழச் செல்வத் தலைவ னுனையாக்கிச்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே
விளக்கம்:
-------------
அவ்வாறு நீ ஆட்சி செய்கின்ற சமயத்தில் சொல்லி விளக்க முடியாத செல்வமும், புகழும் இன்னும் பல சிறப்புகளும் உனக்கு உண்டாகும். பூமடந்தையின் வீட்டில் நீ புகுந்து உல்லாசமாக இருந்து அன்புடன் அவனோடு உலகில் வாழ்ந்து வரும் சமயம், நான் என் மகனாகிய உன்னை நாடி வந்து எடுத்து எல்லாச் சிறந்த செல்வங்களுக்கும் தலைவனாக உன்னை ஆக்கி, சொல்லி விளக்க முடியாத இன்பத்தினை உனக்கு நான் தருவேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக