வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா துணை.

அகிலம்
என்றே மிகமகிழ்ந்து எல்லோரு மோர்முகமாய்
அன்றே மிகமகிழ்ந்து அதிலிருந்தா ரம்மானை
சூழ அணியாய்ச் சுற்று மதில்போலே
நீள அரங்குவைத்து நெருங்கப் புரைகள்வைத்து
வைத்தோர் திசையில் வாசலொன் றாகவிட்டு
விளக்கம்
இவ்வாறு எல்லாரும் மகிழ்ச்சியாக ஒரே எண்ணத்தோடு அங்கே தவம் இருந்தனர். அவர்கள் அணி அணியாக சுற்று மதில்கள் போன்றும் நீளமான தெருக்கள் போன்றும், நெருக்கமாகக் குடிசைகளைக் கட்டினர். அக்குடிசைகளுக்கு ஒரே திசையில் வாசலிட்டனர்.
அகிலம்
மெய்த்தே தினமும் மிகவே துணிதுவைத்து
அன்ன மதற்கு அவித்தநெல் லேயுடைத்து
வன்னமுள்ள காய்கனிகள் வகைவகையாய்த் தான்வகுத்து
நல்லநீர் தன்னில் நாடி மிகத்துவைத்து
எல்லா வகைக்கும் இசைந்தநீ ரேயிருந்தி
அந்திசந்தி உச்சி ஆதிதனைத் துதித்துத்
தந்திரம தாகத் தவசு மிகப்புரிந்தார்
விளக்கம்:
உண்மையாகவே, தினந்தோறும் அழகாகத் துணிகளைத் துவைத்தனர். உணவுக்காக அவித்த நெல்லை உடைத்துச் சுத்தமான காய் கனிகளை வகை வகையாகப் பிரித்து எடுத்து, எல்லா வகைக்கும் உதவும் நல்ல நீரை தேடி, அந்த நீரை கொண்டு வந்து குடித்துத் துணி துவைத்தனர். மாலை சந்திநேரத்தில் இறைவனைத் துதித்து மிகவும் ஒழுங்காகத் தவம் புரிந்து வந்தனர்.
அகிலம்:
நீசர்களின் வியப்பு:
==================
கண்டிருந்த மற்ற கலிநீசச் சாதியெல்லாம்
பண்டி லமைத்ததுவோ பனையேறுஞ் சாணார்க்கு
மூணுநே ரந்துவைத்து உச்சியொரு நேரமதாய்
வேணும் பகுத்தாய் வெகுவா யலங்கரிக்க
வேத னவர்க்கு விதித்த விதிப்படியோ
நாதனவர் பங்கில் நாடிமிக வந்ததுவோ
விளக்கம்:
சான்றோர்த் தவநிலையைக் கண்ட நீசச்சாதிகள், இந்த பனை ஏறும் சாணார்களுக்கு இத்தவம் முன்பிறவியில் அமைந்த புண்ணியத்தால் வந்ததோ? மூன்று நேரமும் துணியைச் சுத்தமாகத் துவைத்து, குளித்து, உச்சிப்பொழுது மட்டும் உணவை உண்டு, அவர்கள் விரும்பிய வகையில் அலங்கரித்து வாழுகின்றனரே! பிரம்மா சான்றோருக்கு விதித்த விதிப்படி நாராயணர் சான்றோருடைய சார்பாக நிற்கின்றாரோ?
அகிலம்:
எப்போமீ னுண்டு என்றே மிகப்பார்த்து
அப்போ ததைவேண்டி அரக்குரக் காயவித்து
வாயிலெடுத் திட்டு வயிறுவளர்க்குஞ் சாணார்கள்
புகையிலையு மறந்து பெண்ணாணு மோர்மனதாய்
இந்தப் படியாய் இருக்க இவர்களுக்கு
முந்தை விதித்த விதிவந் தொத்ததுவோ
விளக்கம்:
எப்பொழுது மீன் கிடைக்கும்? என்று அதற்காகக் காவல் இருந்து, அதை வாங்கி, அரைகுறையாய் அவித்து, வாயில் போட்டு உண்டு வயிற்றை வளர்ப்பவர்கள் இந்த சாணார்கள். இவர்கள் புகையிலை முதலிய தீயபழக்க வழக்கங்களை மறந்து விட்டனரே! ஆண்களும், பெண்களும் ஒரு மனதாகக்கூடி இப்படித் தவம் செய்து கொண்டிருக்க முன்பு இவர்களுக்கு விதித்த விதி இப்பொழுது வந்து ஒத்து கொண்டதோ?
அகிலம்:
அவர்க ளுடுக்கும் ஆடையழுக் கில்லாமல்
இவருடுக்கச் சற்றும் எண்ணமொன் றில்லாதார்
மூணுநே ரந்துவைக்கும் உற்றதுணி பொன்னிறம்போல்
தோணுதலா யவர்கள் தேகம் பழபழென
இந்த விதமாய் இவர்கள்பா வித்திடவே
விளக்கம்:
இவர்கள் தாம் உடுக்கின்ற ஆடைகள் அழுக்கில்லாவண்ணம் இருக்க வேண்டும் என்னும் எண்ணம் சிறிதுகூட இல்லாதவர்கள். இப்பொழுது மூன்று நேரமும் தமது துணிகளைத் துவைத்துப் பொன்னிறம்போல் பிரகாசிக்கச் செய்து சுத்தமாக இருப்பதால் இவர்கள் உடம்பு முழுவதும், பளீர்பளீர் என்று பிரகாசிக்கின்றன என்று நீசர்கள் எல்லாரும் விதவிதமாக எண்ணினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக