வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா துணை.

அகிலம்:
அலங்கார நற்பதியின் அழகுசொல்லக் கூடாது
வலங்கார மான வாய்த்த கடலதினுள்
தேரு பொன்பதிகள் சிங்கார மேடைகளும்
நீருக்குள் ளேயிருக்கும் நிறங்கள்சொல்லக் கூடாது
விளக்கம்:
அந்தப் பதியின் அலங்காரத்தின் அழகு பற்றி விளக்கிக் கூற முடியாது. அதன் பக்கத்தில் அமைந்து இருக்கும் கடலினுள் தேரும், பொன்பதிகளும், சிங்காரமான மேடைகளும் காட்சி அளிக்கும். அந்த நீரின் அழகு நிறங்களைப் பற்றி எடுத்துக் கூற முடியாது.
அகிலம்:
கன்னிமா ராடும் கரியநல்லப் பூஞ்சுனைகள்
பொன்னினா லேபடிகள் பூஞ்சப்பிரக் கொலுவும்
மாணிக்கக் கல்லால் வளர்ந்தமணி மண்டபமும்
ஆணிப்பொன் தன்னால் அழகுபூம் பந்தல்களும்
வகையின்ன தென்று வகுக்க முடியாது
விளக்கம்:
கன்னிகள் நீராடுகின்ற அழகிய பூக்கள் நிறைந்த சுனைகளும், அதன் உள்ளே இறங்கிக் குளிக்கக் கண் மயங்கும் அளவு அழகு வாய்ந்த பொன்னால் ஆகிய படிகளும், பலவகை உல்லாச மண்டபங்களும், மாணிக்கக் கல்லால் ஆகிய உயர்ந்த மணி மண்டபமும், உயர்ந்த வகைப் பொன்னால் உண்டாக்கப்பட்ட அழகிய பூக்களால் ஆகிய பந்தல்களும், முட்டப்பதி நாட்டில் காட்சி அளிக்கும். அங்கு உள்ள அழகுக் காட்சிகளை இன்ன வகையானது என்று எடுத்து இயம்ப இயலாது.
அகிலம்:
தொகையின் தென்று தொகுக்க முடியாது
இப்பதியில் நீங்கள் இந்தநே ரம்போனால்
அப்பதியி லுங்களுக்கு அதிகப்பலன் கிட்டுமென்று
தூக்கமதில் சொர்ப்பனம்போல் சொன்னாரே வுத்தரவு
ஆக்க முடனே அவனெழுந்து சொல்லிடவே
விளக்கம்:
அதன் விலை மதிப்பையும் நிச்சயிக்க முடியாது. இத்தன்மையான அப்பதிக்கு நீங்கள் இவ்வேளையில் போனால் உங்களுக்கு அதிகமான பலன் கிடைக்கும் என்று கனவின் மூலம் உத்தரவிட்டார். கனவு கண்ட சான்றோன், தான் கனவில் கண்டவற்றை எல்லாம் துடிப்புடன் எல்லாரிடமும் சொல்லவும்,
அகிலம்:
கேட்டு எல்லோரும் கெட்டிதா னென்றுசொல்லி
ஆட்டு மெனவே எல்லோருஞ் சம்மதித்த
நடக்கத் துணிந்தார் நாரண ருண்டெனவே
அடக்க முடனிதிலே ஆறுமா சம்வரைக்கும்
இருந்தோமே நன்றாய் இனிநடப்போ மப்பதியில்
வருந்தாமற் போவோம் மகாபரனா ருண்டெனவே
போவோ மெனவே பெண்ணா ணுடனெழுந்து
தாவமுள்ள முட்டப் பதிதலத்தில் வந்தனரே
விளக்கம்:
எல்லாரும் கனவின்படியே முட்டப்பதி செல்லச் சம்மதித்து, நாராயணர் நம்மைக் காப்பார் என நினைத்து முட்டப்பதி நோக்கி நடக்கலாயினர். நாம் ஆறு மாத காலம் வரை மிகவும் பொறுமையுடன் இந்த வாகைப் பதியில் இருந்து விட்டோம், இனி நாம் எவ்வித வருத்தமுமின்ற நம்மை மகாபரனாகிய நாராயணர் காப்பார் என்று எண்ணி முட்டப்பதி நோக்கிச் செல்வோம் என்று கூறிப் பெண்களும், ஆண்களும் அங்கிருந்து எழுந்து விரைவாக நடந்து இதமான வெப்பம் பொருந்திய முட்டப்பதி வந்தனர்.
அகிலம்:
துவையல்காரர்கள் முட்டப்பதியில் தவசு இருத்தல்
===============================================
வந்தனர் பதியின் கூறும் வாரியின் செயலுங் கண்டு
சந்தன வாரி போலும் தலமிது நன்ற தாகும்
இந்தநற் பதியில் நாமள் இருந்துதான் தவசு செய்தால்
செந்தமி ழாயன் பாதம் செயல்பெற வாழ்வோ மென்றார்
விருத்தம்:
சான்றோர்கள் முட்டப்பதியின் அழகையும், அக்கடலின் அமைதியையும் கண்டனர். அவர்கள் அவ்விடத்தைப் பார்த்து, திருச்செந்தூரின் சந்தன மணம் வீசும் கடலைப் போல் இது நல்ல அமைதியான கடலாகும். இந்தப் பதியில் நாம் தவம் இருந்தால் செந்தமிழுக்குத் தலைவனாகிய மாயனுடைய பாதத்தின் பேறினை அடைந்து வாழ்வோம் என்றனர்.
அகிலம்:
வாழ்வ திற்குறை வராது மக்களுங் கிளைக ளோடு
தாழ்வ தில்லை வண்ணம் தவமது வளர்வ தாகும்
நாள்வழிப் பலனுண் டாகும் நாரண ரருளி னாலே
ஆள்வது திடனா மென்று அதிலவ ரிருந்தா ரன்றே
விளக்கம்:
இங்கே நம்முடைய வாழ்விற்கு எந்தக் குறைவும் வராது. மக்கள் தங்கள் சந்ததியாரோடு எந்தவிதத் தாழ்வும் இல்லாவண்ணம் தாம் இருக்கின்ற தவம் வளர்ச்சி அடைவதற்குச் சிறந்த இடம் இதுவாகும். தினந்தோறும் நல்ல பலன் உண்டாகும். நாராயணரின் அருளினால் இந்நாட்டை ஆட்சி புரிவதும் நிச்சயம் என்று கூறி அவர்கள் தவம் இருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக