வியாழன், 16 ஏப்ரல், 2015

அய்யா துணை.

சாட்டுநீட்டோலை:
==================
மாதாவும் பால்தந்து அனேகநாள் ஆச்சுதே
வயிறும் பசிக்குதையா சிவனே அய்யா
விளக்கம்
-----------------
ஆனால் என் தாய் இலட்சுமிதேவியோ எனக்குப் பாலமுதலம் தந்து நெடுநாள்கள் ஆகிவிட்டன, என் வயிறோ பசிக்குது சிவனே அய்யா.
சாட்டுநீட்டோலை:
==================
கப்பல் சிறிதெனவும் கடல்தான் பெரிதெனவும்
கவிழ்ந்து இருக்கலாச்சே சிவனே அய்யா
விளக்கம்
-----------------
பெரிய கடலினுள்ளே அகப்பட்டுக் கவிழ்ந்து விட்ட சிறிய கப்பலைப் போன்று நான் உள்ளேன் சிவனே அய்யா
சாட்டுநீட்டோலை:
==================
பாம்பும் படம்விரித்துப் படல்கொண்டு வீசுதையோ
பாதமும் காந்துதையோ சிவனே அய்யா
விளக்கம்:
---------------
குண்டலினி சக்தி என்னும் பாம்பு பரந்த வடிவோடு (படலை) படம் விரித்து எழுந்து வெப்பக் காற்றை வீசுகிறது. அதனால் பாதமும் காந்துகிறதே சிவனே அய்யா.
சாட்டுநீட்டோலை:
==================
நீட்டி நொடிக்குமுன்னே கலியழித்து வாவென்று
நீயும்விடை தந்தாயோ சிவனே அய்யா
விளக்கம்:
---------------
உடம்பை நீட்டிச் சோம்பல் முறிக்கும் முன்னால் இந்தக் கலியை அழித்து வர வேண்டும் என்று நீ விடை தந்தாய் சிவனே அய்யா
சாட்டுநீட்டோலை:
==================
சிந்திக்கிடக்கும் மயிர்பந்து முடிந்துவிட்டால்
சீமைஅழிந்திடுமே சிவனே அய்யா
விளக்கம்
--------------
அவிழ்ந்து கிடக்கின்ற தலைமயிரைப் பந்தாக இறுக்கி முடித்து விட்டேனானால் இந்த உலகம் அழிந்து விடும் சிவனே அய்யா.
சாட்டுநீட்டோலை:
==================
ஊமைபோலிருப்பதை வாயைத் திறந்துவிட்டால்
உலகம் அழிந்திடுமே சிவனே அய்யா
விளக்கம்:
---------------
மௌனத்தைக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் என் வாயை சிறிது திறந்தேனானால் இவ்வுலகம் அழிந்து விடும் சிவனே அய்யா.
சாட்டுநீட்டோலை:
==================
அதிசயங்கள் வளரும் அறியகிணற்றின்பாலை
எவரும் குடிக்கிறாரே சிவனே அய்யா
விளக்கம்
--------------
பலவிதமான அதிசயங்களை உருவாக்குகின்ற சக்தி படைத்த முத்திரிக் கிணற்று நீரை எல்லாரும் அருந்துகின்றனர் சிவனே அய்யா.
சாட்டுநீட்டோலை:
==================
எவரெவர் நினைக்கின்ற நினைப்புக்குத் தக்கதாக இருந்து
விளையாடினேன் சிவனே அய்யா
விளக்கம்:
---------------
யார் யார் எப்படி நினைக்கின்றார்களோ, அவரவர் எண்ணத்துக்குத் தக்கவாறு நானும் உருவாகி விளையாடி வந்தேன் சிவனே அய்யா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக