வியாழன், 16 ஏப்ரல், 2015

சக்கராயுதம் பணம் ஆனது எப்படி?

அப்போது நீசன் அகமகிழ்ந்து கொண்டாடி
இப்படியே தாருமென்று ஈந்தானே சக்கரத்தை
சக்கரத்தை வேண்டி சங்குசரத்தாமன்
மிக்க பணமாக்கி மிகுத்த சக்கராயுதத்தை
சபிக்கவே மாயன் சக்கராயுதம் கேட்கும்
நீசனிடத்தில் என்னை பணமாக்கி
ஈயுகிறீரே சுவாமி சாபமிட்டு இப்போது
இப்போதிடும் சாபம் எப்போது தீருமென்று
அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே
கலி மாறும் பொது கதறும் உன் சாபம் என்றார்
வலி யான சக்கரமும் வாய்த்த பணமாகியதே
- அகிலத்திரட்டு அம்மானை
மனிதனுக்கு பணத்தின் மேல் உள்ள ஆசை கலியுகம் முடியும் வரை தீராது. மனிதன் பசி தீர்ந்தாலும் ஆசைகள் தீராது. ஆசை பட்ட பொருள்களை அடைவதற்கும், அனுபவிப்பதற்கும் பணம் தேவைப்படுகிறது என்பதே காரணம்.
உழைப்பால் தேடும் செல்வம் தனது பேராசைகளை சந்திக்க போதாது என்ற நிலையில் திருடுகிறான், கொள்ளை யடிக்கிறான். ஏமாற்றுகிறான். வட்டிக்கு கடன் கொடுக்கிறான். கொள்கைகளையும் , இலட்சியங்களையும், நெறியையும் , கற்பையும் கூட விற்கிறான். மொத்தத்தில் கலி மாய்கையினால் மானம்கெட்டு வாழ்கிறான்.
மனிதன் மனிதன் தனது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டால் இந்த பிரச்சினைகள் வராது . கலியுகம் அழிந்து தர்மயுகம் தோன்றும் போது தான் அந்த நிலை உருவாகும்.
சக்கராயுதம் பணம் ஆனது எப்படி என்று தெரியுமா?
மனிதன் விலங்குகளிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள தனது இனத்துடன் ஓன்று சேர்ந்து வாழ வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டான். இயற்கையின் சீற்றங்களுக்கும் பயந்து சமுதாய ஒற்றுமையை வளர்த்துகொண்டான். உழைப்பால் விளைவித்த பொருள்களை பண்டமாற்று முறையில் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மாற்றி கொண்டனர். அரிசிக்கு மிளகையும், மீனுக்கு புளியையும் , உப்புக்கு எண்ணையையும் என ஒரு பொருளுக்கு விலை மதிப்பீடு சரியாக கொடுக்காமல் பரிமாறிகொன்டனர் . நெடுந்தூர பயணங்களுக்கும் , கடல் கடந்த வியாபரதிற்க்கும் இது சரிபட்டு வரவில்லை. மனிதன் யோசித்தான். பொருள்களுக்கு விலையை நிர்ணயித்தான். பொருளுக்கு மாற்றாக பணத்தை கையாளத் தொடங்கினான். இது மனிதனுக்கு மிக எளிதாக பட்டது. பணம் தங்கமாகவும், வெள்ளியாகவும் புழக்கத்தில் விடப்பட்டன. பின்னால் அது பித்தளையாகவும்,செப்பாகவும், அலுமினியமாகவும், இரும்பாகவும் மாறியது . காலப்போக்கில் மனிதன் இந்த காசுகளையும் கையாளுவது சிரமம் என உணர்ந்தான். பணத்தை காகிதங்களாக்கினான்.கலி முற்றும் காலத்தில் திருடர்களுக்கு பயந்து இந்த காகிதங்களும் மாறி காசோலை மற்றும் வரைவு வோலைகளாக வணிக வங்கிகளால் அறிமுகபடுத்தபட்டன. நவீன யுகத்தில் கம்புயூட்டர் வளர்ச்சியின் காரணமாக வெறும் PIN நம்பர் களாக மாறி விட்டன. இந்த கலியுகத்தில் பணத்தை கண்ணில் பார்க்காமலே நம்மால் வாங்கவும் முடியும் பிறருக்கு கொடுக்கவும் முடியும்.
சக்கராயுதம் பணம் ஆனது என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்வது இந்த கலி கால வளர்ச்சியைத்தான். கலியுகம் முடியும் போது பணம் தனது மதிப்பை இழந்து போகும்.
அப்படிப்பட்ட பணத்தின் மேல் ஆசை வேண்டாம். பண ஆசை நம்மை கலியுகத்தில் இருந்து தர்மயுகதிற்க்கு போகவிடாது. குறைந்தபட்ச தேவைகளை சமாளிக்க தேவையான பணத்தை சம்பாதிப்பது போதுமானதாகும். அதற்க்கு அதிகமாக வரும் பணத்தை இறப்போர் முகம் பார்த்து தர்மமாக கொடுப்பது கலியை வென்று நம்மை தர்மயுகதிற்க்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை.
கலியன் தான் திருமாலின் சக்கரத்தின் மேல் ஆசை கொண்டான்.
அய்யாவின் அன்புக்கொடி மக்களாகிய நாம் சக்கராயுதத்தின் மேல் ஆசை கொள்ள வேண்டாம்.
இறைவனின் ஆயுதத்தை உபயோகிக்கும் வல்லமை நமக்கு இல்லை என்பதை உணர்வோமாக.
பிறவி பெருங்கடலை நீந்தும் போது பணம் / செல்வம் நமது வேகத்தை தடை செய்யும் ஒரு தடங்கல்லாக தான் இருக்கிறது. பணத்தின் மேல் பற்று இல்லாத ஞானிகள் எளிதாக பிறவி பெருங்கடலை கடப்பதன் இரகசியத்தை அறிந்து கொள்வீராக.
பணம் பொய்யான இவ்வுலக வாழ்க்கையை கொடுக்கும்.
மெய்யான தர்மயுக வாழ்வை கெடுக்கும் .
"ஏழ்மையாய் இரு என்னுடைய கண்மணியே " என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்வதை அறிந்து அய்யா வழியில் நடப்போம் .
அய்யா உண்டு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக